April 27, 2022 4:08 am

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் இன்றைய தினம் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்கினை சந்தித்து கலந்துரையாடினர்.

நேற்று மதியம் 12 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்புக்கு பின்னர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில்,

எமது உறவுகள் காணாமலாக்கப்பட்ட விதம், எமது போராட்டங்கள், எமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க தூதுவரிடம் நாம் விளக்கிக் கூறி இருந்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் எமது எதிர்ப்பையும் மீறி உருவாக்கப்பட்டது என்பதை அவருக்கு தெளிவாக கூறியதுடன், அந்த அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட சில விவரங்களுக்கு இதுவரை நடவடிக்கையை எடுக்கப்படாமை தொடர்பாகவும் கூறியிருந்தோம். அத்துடன் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை நம்புமாறு எம் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தோம். தான் ஒரு குழந்தைக்கு தாய் என்றும் உங்கள் துயரங்கள் வேதனைகள் எனக்கு புரிகிறது எனவும் அமெரிக்க தூதுவர் எம்மிடம் எடுத்துரைத்தார். நாம் இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை எனவும் சர்வதேச நீதிப் பொறிமுறையே எமக்கு வேண்டும் என தெரிவித்தோம் என்றார்

Share Button