July 12, 2021 3:21 am

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 1986 இல் கமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் வெளியான விக்ரம் படத்தின் பெயரையே இந்த படத்துக்கும் பெயராக சூட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். பெயர் அறிவிப்பு வெளியீட்டு விடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியானது.

இதுவும் சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேசமயம், இது அதுல்ல என்கிற சந்தேகத்தையும் ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது விக்ரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்.

2004-இல் கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி பட போஸ்டரையே நாயகர்களை மட்டும் மாற்றி வெளியிட்டுள்ளதுபோல் உள்ளது தற்போது வெளியாகியுள்ள விக்ரம் பட போஸ்டர். விருமாண்டி படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்த கமல்ஹாசன், நெப்போலியன் மற்றும் பசுபதி ஆகியோர் போஸ்டரில் இடம்பெற்றிருந்ததனர். போஸ்டரில் கமல்ஹாசன் மையத்திலும், கமல்ஹாசனுக்கு வலதுபுறத்தில் நெப்போலியனும், கமல்ஹாசனுக்கு இடதுபுறத்தில் பசுபதியும் இருந்தனர்.

இதேபோல தற்போது வெளியாகியுள்ள விக்ரம் பட போஸ்டரில் மையத்தில் கமல்ஹாசனும், கமல்ஹாசனுக்கு வலதுபுறத்தில் விஜய் சேதுபதியும், கமல்ஹாசனுக்கு இடதுபுறத்தில் ஃபகாத் ஃபாசிலும் உள்ளனர். விருமாண்டி போஸ்டரை போலவே மூன்று கதாபாத்திரங்களைத் தவிர்த்து வேறு எந்த கதாபாத்திரமும் போஸ்டரில் இடம்பெறவில்லை.

இவ்விரண்டு போஸ்டர்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதுதவிர மேலும் முக்கிய விவாதத்தையும் கிளப்பியுள்ளனர் ரசிகர்கள்.

கமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் ஏற்கெனவே வெளியான ஒரு படத்தின் பெயரையே இதற்கும் பெயராக சூட்டியுள்ள லோகேஷ் கனகராஜ், கமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் ஏற்கெனவே வெளியான மற்றொரு படத்தின் போஸ்டர் பாணியையே இதற்கும் பயன்படுத்தியுள்ள லோகேஷ் கனகராஜ், கமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் ஏற்கெனவே வெளியான வேறொரு படத்தின் கதை, திரைக்கதையையே இதற்கும் பயன்படுத்திவிடுவாரோ லோகேஷ் கனகராஜ் என்கிற ஐயத்துடன் விவாதங்களைத் தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் தீவிர கமல்ஹாசன் ரசிகர் என்பதும், கைதி படத்துக்கு முன்னுதாரணமாக விருமாண்டி படம் இருந்ததாக அவரே கூறியதும் தற்போது நினைவில் வந்துபோவது தவிர்க்க முடியாததே.

Share Button