March 29, 2022 3:12 am

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.!

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், அறிமுக அணிகளான குஜராத் – லக்னோ மோதின.

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். எல்எஸ்ஜி இன்னிங்சை கேப்டன் கே.எல்.ராகுல், டி காக் இருவரும் தொடங்கினர். ஷமி வீசிய முதல் பந்திலேயே ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி நடையை கட்ட, லக்னோ அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே டி காக் 7 ரன், எவின் லூயிஸ் 10, மணிஷ் பாண்டே 6 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, எல்எஸ்ஜி அணி 4.3 ஓவரில் 29 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், தீபக் ஹூடா – ஆயுஷ் படோனி இணைந்து 5வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்து அசத்தினர்.

ஹூடா 55 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), படோனி 54 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர்.லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் குவித்தது. க்ருணால் பாண்டியா 21 ரன் (13 பந்து, 3 பவுண்டரி), சமீரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் முகமது ஷமி 3, வருண் ஆரோன் 2, ரஷித் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ், 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து வென்றது.

அதிகபட்சமாக ராகுல் திவாட்டியா 40 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அசத்தினார். ஹர்திக் பாண்டியா 33 ரன், வேட் மற்றும் மில்லர் தலா 30 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர். லக்னோ பந்துவீச்சில் சமீரா 2, ஆவேஷ் கான், குர்ணல் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை வசப்படுத்திய குஜராத் டைட்டனஸ் அணி 2 புள்ளிகள் பெற்றது.

Share Button