April 22, 2022 1:31 am

ரம்புக்கனாவில் ஊரடங்கு நீக்கம்.!

இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ரம்புக்கன பகுதியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இது மக்களிடையே ராஜபக்சே குடும்பத்தினர் மீதான கொந்தளிப்பை அதிகரித்தது. இதனால், அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

 இந்த உத்தரவு நேற்று முன்தினம் அதிகாலையுடன் திரும்ப பெறப்பட்டது. இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜிஎல். பீரிஸ், “துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது. பாகுபாடற்ற விசாரணை நடத்த மனித உரிமை ஆணையத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு நேர்மையுடன் நடந்து கொள்ளும்,’’ என்று கூறினார்.

உலகம் முழுவதும் இதே பேச்சுதான்

வாஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் உலக நாடுகளின் நிதி அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், “சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஜி-20 மாநாடுகளில் இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து தீவிரமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதுவே இந்த வாரத்தின் பேச்சு பொருளாக அமைந்தது,’’ என்று தெரிவித்தார்.

நான்காவது முறையாக 40 ஆயிரம் டன் டீசல்  இந்தியா அனுப்பியது

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள், மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்காக இந்தியா தொடர்ந்து, பெட்ரோல், டீசலை வழங்கி வருகிறது. ஏற்கனவே, 3 தவணைகளாக பெட்ரோல், டீசலை அனுப்பி வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் வழங்கியது. இந்நிலையில், அங்கு நிலவும் கடுமையான மின்தட்டுப்பாட்டை போக்க, கூடுதலாக 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை இந்தியா நேற்று கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இது, 4வது முறையாகும்.

கடலுக்கு அடியில் மின்சார கேபிள்

இலங்கையின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு எரிபொருள், நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றவை நீர்மின் நிலையங்கள் மூலம் உற்பத்தியாகிறது. இந்நிலையில், இலங்கை நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த போது, ஒன்றிய மின்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கடலுக்கு அடியில் மின்சார கேபிள் மூலம் மின்சாரம் வினியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திட்டம், தற்போது மீண்டும் செயல் வடிவம் பெற தொடங்கி உள்ளது.

Share Button