May 14, 2022 1:59 am

ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ள அரசாங்கத்தில் எந்த அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இதேவேளை, அரசாங்கத்தில் எந்த அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாக, சுயாதீன அணியின் 10 கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

சகல கட்சிகளினதும் பங்குபற்றுதலுடனும் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றே தங்களது தரப்பு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பனவும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்படவுள்ள அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். பிரதமர் பதவியை பொறுப்பேற்க தாம் தயார் எனத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது

எனினும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தமது தீர்மானத்தை மாற்ற முடியாது என பதில் கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அறியப்படுத்தி இருந்தார்

எனினும், எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எவரையேனும் இணைத்துக்கொள்ள வேண்டுமாயின், அது குறித்து தாமதமின்றி தமக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்

இதற்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதியால் தற்போது ஸ்தாபிப்பதற்கு எதிர்ப்பார்க்கும் அரசாங்கம், மக்கள் விருப்பத்துக்கு முரணானது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்க தயாரென கடந்த 12 ஆம் திகதியே தாம் முதன்முறையாக அறியப்படுத்தியதாக ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என எதிர்க்கட்சித் தலைவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளுக்கும் இடையே, இதற்கு முன்னர் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரதமர் பதவியை பொறுப்பேற்கத் தயார் என்பதை தாம் தெரிவித்திருந்ததாகவும், சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனை தம்மால் முன்வைக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button