August 18, 2021 10:05 am

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு இங்கிலாந்து பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆனதால், இரண்டாவது டெஸ்ட் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 364/10 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 129 ரன்கள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய

இங்கிலாந்து அணி 391 ரன்கள் எடுத்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. ரூட் 180 ரன்கள் குவித்து அசத்தினார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணி 298/8 ரன்கள் சேர்த்து 271 முன்னிலையுடன் டிக்ளேர் அறிவித்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி இரண்டு செஷன்களின்போது களமிறங்கிய இங்கிலாந்து அணி 120/10 மட்டும் சேர்த்து, ஆட்டத்தை டிரா செய்ய முடியாமல் 151 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

நெருக்கடி:

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு, இங்கிலாந்து அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. கேப்டன் ஜோ ரூட், பௌலர் ஜேம்ஸ் ஆண்டர்சனை தவிர யாரும் சிறப்பாக சோபிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த இங்கிலாந்து அணி பயிற்சியாளர் சில்வர்வுட்டிம், பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது டெஸ்டில் விளையாடுவாரா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சில்வர்வுட், “பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியே ஆக வேண்டும் என நாங்கள் நிர்ப்பந்திக்க மாட்டோம். அப்படி நடந்தால் அவரது மனவழுத்தம் மேலும் அதிகரிக்கத்தான் செய்யும். அவரே முன்வந்து, ‘நான் விளையாடத் தயார்’ என சொல்லும்வரை நாங்கள் காத்திருப்போம். அவருக்கு நாங்கள் நிச்சயம் அழைப்பு விடுக்க மாட்டோம்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு: கடந்த ஜூலை மாதத்தில் நடந்துமுடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றிய பிறகு பென் ஸ்டோக்ஸ், கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஒதுங்கியிருக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share Button