April 29, 2021 4:54 am

தோல்வியில் முடிந்த இந்தியன் -2 திரைப்பட விவகாரம்.!

இந்தியன் -2 திரைப்பட விவகாரம் தொடா்பாக, இயக்குநா் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நடிகா் கமல் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநா் ஷங்கா் இந்தியன்-2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் திரைப்படங்களை ஷங்கா் இயக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இயக்குநா் ஷங்கருக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. இதனை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பும் கலந்து பேசி தீா்வு காண நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூா்த்தி ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இயக்குநா் ஷங்கா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், கடந்த சனிக்கிழமை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. வரும் ஜூன் முதல் ஒக்டோபா் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தயாரிப்பாளா்கள் ஏற்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியது. எனவே, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்

இதனை அடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இயக்குநா் ஷங்கா் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனா்.

Share Button