November 26, 2017 8:18 pm

தீவிரவாதத்துக்கு எதிராக போராட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மக்களுடன் கலந்துரையாடும் விதமாக மன் கி பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி பேசும் 38-வது மன் கி பாத் நிகழ்ச்சி வானொலியில் இன்று ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, தீவிரவாதத்துக்கு எதிராக போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றார். அப்போது அவர் பேசியதாவது: மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

தீவிரவாத தாக்குதலின் போது துணிச்சலுடன் செயல்பட்ட பொதுமக்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்பட ஒவ்வொருவரும் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அவர்களது மகத்தான தியாகத்தை இந்த நாடு என்றும் மறக்காது. மும்பை தீவிரவாத தாக்குதலின் 9-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தீவிரவாதம் பற்றிய விவகாரத்தினை கடந்த சில வருடங்களாக இந்தியா எழுப்பி வருகிறது. முதலில் உலக நாடுகள் இதனை பெரிதாக கருத்தில் எடுத்து கொள்ளவில்லை. ஆனால், தீவிரவாத அழிப்பு நோக்கங்களை பற்றி அவை தற்பொழுது கவனத்தில் கொண்டு வருகின்றன.

இந்தியாவில் வாழ்ந்த மகாவீர், புத்தர், குருநானக், மகாத்மா காந்தி போன்றோர் அமைதி, அகிம்சை ஆகியவற்றை  போதித்துச் சென்றுள்ளனர். மனித இனத்தினை அழிக்கும் படுகுழியாக தீவிரவாதம் உள்ளது.அதனால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும்தீவிரவாதத்தினை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Share Button