July 1, 2021 4:36 am

ட்விட்டர் சமூக ஊடக பக்கங்களிலிருந்து ஆபாசப் படங்களையும், விஷயங்களையும் ஒரு வாரத்துக்குள் நீக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

ட்விட்டர் (சுட்டுரை) சமூக ஊடக பக்கங்களிலிருந்து ஆபாசப் படங்களையும், விஷயங்களையும் ஒரு வாரத்துக்குள் நீக்குமாறு அந்நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ட்விட்டர் சமூக ஊடகத்தில் சிலரது பக்கங்களில் ஆபாசப் படங்களும் விஷயங்களும் இருப்பதை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கவனத்தில் கொண்டுள்ளது. அவற்றை ஒரு வாரத்துக்குள் நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண்மை இயக்குநருக்கு மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து புலனாய்வு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல்துறை ஆணையருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஏற்கெனவே ஒரு புகார் வந்தது. அது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையம் ட்விட்டரின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. எனினும், அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தடை செய்யப்பட்ட ஆபாசப் படங்கள் ட்விட்டரில் கிடைப்பது என்பது இந்திய சட்டங்களை மீறுவதோடு, அந்த நிறுவனத்தின் சொந்தக் கொள்கைக்கும் முரணானது என்று தெரிந்திருந்தும் அப்படங்களை நீக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அறிந்து மகளிர் ஆணையம் வேதனையடைகிறது.

ஆபாசப் படங்களைப் பதிவு செய்திருக்கும் சில கணக்கு விவரங்களை ட்விட்டர் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதோடு ஒரு வாரத்துக்குள் அவற்றை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 10 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் தொடர்பான படங்கள் ட்விட்டர் சமூக ஊடக பக்கங்களில் கிடைப்பதாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம், தில்லி காவல்துறையில் புகார் அளித்திருந்தது. அதன்பேரில் தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்த மறுநாள், தேசிய மகளிர் ஆணையம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Share Button