April 7, 2022 2:29 am

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார்.!

எம்சிஏ மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். 12 பந்துகளை எதிர்கொண்ட ரோகித்  3 ரன் மட்டுமே எடுத்து உமேஷ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பில்லிங்ஸ் வசம் பிடிபட்டார்.

இஷான் – டெவால்ட் பிரெவிஸ் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தனர். பிரெவிஸ் 29 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வருண் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். மும்பை அணி 11 ஓவரில் 55 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சூரியகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடியது.

கடைசி கட்டத்தில் இருவரும் அதிரடியில் இறங்க மும்பை ஸ்கோர் சற்று வேகம் எடுத்தது. சூரியகுமார் 34 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 52 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பில்லிங்ஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த போலார்டு 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு அசத்த,  மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது.

திலக் வர்மா 38 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), போலார்டு 22 ரன்னுடன் (5 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் கம்மின்ஸ் 2, உமேஷ், வருண் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேகேஆர் களமிறங்கியது.

Share Button