May 11, 2021 11:00 am

கொரோனாவிலிருந்து தப்ப மாட்டு சாணம், கோமியத்தை உடலில் பூசும் குஜராத்தியர்கள்!

இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் பரவல் உச்சம் பெற்றுள்ள நிலையில், அங்கு ஏராளம் உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன. உலகின் மருந்து உற்பத்தி களஞ்சியம் என கூறப்படும் இந்தியாவை, கொரோனா மூச்சு முட்ட வைத்துக் கொண்டிருக்கிறது.

அங்கு தடுப்பூசி குறைந்தளவானவர்களிற்கே செலுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. உயிரிழந்தவர்களை தகனம் செய்ய முடியாமல் உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தற்போது மாற்று சிகிச்சை முறையொன்று வேகமாக பரவி வருகிறது.

மாட்டு கோமியம் மற்றும் சாணத்தை உடல் முழுவதும் பூசி கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாமென பலர் நம்புகிறார்கள்.. இது குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ள போதும், அதை பொருட்படுத்தாமல் பலர் அங்கு குவிகிறார்கள்.

குஜராத்திலுள்ள பலர் வாரம் ஒருமுறை மாட்டு கொட்டகைகளிற்கு சென்று, மாட்டு சாணம், கோமியத்தை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் மாட்டு கோமியத்தை அருந்தவும் செய்கிறார்கள்.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யுமென அவர்கள் நம்புகிறார்கள். சில தினத்தின் முன்னர், பா.ஜ.க எம்.பியொருவர், தான் மாட்டு கோமியம் அருந்தியே கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்துக்களின் புனித மரபுடன் மாடு பின்னிப்பிணைந்தது. மத நம்பிக்கைக்கு அப்பால், மாட்டு கோமியமும், சாணமும் வைரஸ் எதிர்ப்பு சக்தி மிக்கதாக அவர்கள் நம்புகிறார்கள். வீடுகளை சாணத்தினால் மெழுகுவது, விவசாயத்தில் கிருமிநாசினியாக மாட்டு கோமியத்தை பயன்படுத்துவது இந்தக்களில் வாழ்க்கை முறையில் ஒன்று.

இந்த சிகிச்சை முறையை, மிக படித்தவர்கள் கூட பெறுகிறார்கள்.

ஒரு மருந்து நிறுவனத்தின் உதவி மேலாளர் கௌதம் மணிலால் பெரிசா, வெளிநாட்டு ஊடகங்களிடம், “இதோ … மருத்துவர்கள் கூட இங்கு வருகிறார்கள். இந்த சிகிச்சையானது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள், இதனால் அவர்கள் எந்த பயமும் இல்லாமல் நோயாளிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க முடியும்.” என்றார். அவர் கடந்த ஆண்டு கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயல்முறை அவரை குணமடைய உதவியது என்றும் அவர் கூறினார்.

மாட்டு கொட்டகைகளிற்கு வருபவர்கள் தங்கள் உடலில் சாணம் மற்றும் கோமிய கலவையை தமது உடலில் பூசி,  அது வறண்டு போகும் வரை காத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் மாடுகளை கட்டிப்பிடித்து, மரியாதை செலுத்துகிறார்கள். அவர்களின் உடற்திறனை மேம்படுத்த யோகா பயிற்சி செய்கிறார்கள். பின்னர், உடலில் காய்ந்துள்ள சாணக்கலவையை, கோமியம் அல்லது பால் அல்லது வெண்ணெய் கொண்டு கழுவுகிறார்கள்.

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் கோவிட் -19 பரவுவதற்கான மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வதை பலமுறை எச்சரித்துள்ளனர். ஏனெனில் போலி மருந்துகள் மற்றும் சிகிச்சையின் போக்கு பிற நோய்கள் அல்லது பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

கோவிட் -19 வைரஸிற்கு எதிராக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மாட்டு சாணம் அல்லது கோமியம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

Share Button