November 27, 2017 5:00 am

குஜராத் மண்ணின் மைந்தனான எனது பொது வாழ்வில் கறை கிடையாது: பிரதமர் மோடி பேச்சு

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் உச்சகட்ட உத்திகளை கையாண்டு வருகின்றன. பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்துள்ளார்.

பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள கட்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட கட்ச் நகரில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக தன்னை குற்றம்சாட்டி பிரசாரம் செய்துவரும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய மோடி, நீங்கள் இந்த மாநிலத்துக்கு வந்து இந்த மண்ணின் மைந்தனான என்னைப்பற்றி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறீர்கள்.

எனது பொது வாழ்வில் கறை படிந்தது கிடையாது என குறிப்பிட்ட மோடி, இந்த தேர்தல் நம்பிக்கை, வளர்ச்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் இடையே நடைபெறும் போட்டியாகும் என்றும் தெரிவித்தார்.

Share Button