April 26, 2022 2:44 am

ஒன்றிய அரசின் கடும் எச்சரிக்கையை அடுத்து பேட்டரி பழுது ஏற்பட்டுள்ள மின்சார ஸ்கூட்டர்களை தயாரிப்பு நிறுவனங்கள் திரும்பப் பெற்று வருகின்றன.

எரிபொருள் விலை உயர்வு, சுற்றுசூழல் மாசு ஆகிய காரணங்களால் மின்சார ஸ்கூட்டர்களை வாங்க உலகளவில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து வெடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசிய ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை செயலாளர், பழுதுள்ள வாகனங்களை திரும்பப் பெறவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இதையடுத்து பழுதான வாகனங்களை திரும்பப் பெறும் நடவடிக்கை மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் முடுக்கி உள்ளன. முதற்கட்டமாக ஓலா, ஒக்கினவா, ப்யூர் EV ஆகிய நிறுவனங்கள் 7000 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

அதிகபட்சமாக 3,215 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள ஒக்கினவா நிறுவனம், பேட்டரி மற்றும் பேட்டரி தொடர்பான பழுதுகளை கட்டணம் ஏதும் பெறாமல் சரி செய்து தருவதாக கூறியுள்ளது. ஓலா நிறுவனம் 1,441 ஸ்கூட்டர்களை திரும்ப பெறுகிறது. பேட்டரி மற்றும் தெர்மல் பாதுகாப்பு அமைப்புகளை மறு சோதனை செய்து பழுது இருப்பின் அதனை நீக்கி தருவதாக ஓலா தெரிவித்துள்ளது. பேட்டரி தீப்பிடிப்பு புகாருக்கு ஆளான ப்யூர் EV 2000 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது. 

Share Button