April 21, 2022 2:13 am

உக்ரைனை சின்னாப்பின்னமாக்க புதிய வியூகம் அமைத்துள்ள ரஷ்யா, அங்கு கூடுதல் படைகளை குவித்து வருகிறது.

நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், முக்கிய நகரங்கள், தெருக்கள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை, குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்ததால், ரஷ்யாவை இரண்டாக உடைத்து கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற திட்டமிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்த ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட்டு, அங்கு குவிக்கப்பட்டனர்.

டொன்ன்பாஸை கைப்பற்ற மரியுபோல் முக்கிய இடமாக ரஷ்யா கருதுகிறது. இதனால், மரியுபோலை சுடுகாடாக்கும் எண்ணத்தில் ரஷ்யா உறுதியாக உள்ளது. கிட்டதிட்ட 90% நகரத்தை ரஷ்யா அழித்துள்ளது. சுமார் 21,000 அப்பாவி மக்களை கொன்றுள்ளது.

பல தொழிற்சாலைகளை கைப்பற்றி உள்ளது. ஒட்டு மொத்தமாக சிதைந்து கிடக்கும் மரியுபோல் நகரத்தில் மிச்சம் இருப்பது மிகப்பெரிய அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலை மட்டுமே. இந்த தொழிற்சாலையை குறிவைத்து அங்குள்ள பதுங்கு குழியில் பதுங்கி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் உக்ரைன் வீரர்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் வீரர்கள் சரணடைய கெடு விதித்தும், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் போலந்து எல்லை வழியாக உக்ரைனுக்கு வருகிறது. இதை தடுக்கவும், அவர்களை அச்சுறுத்தவும் போலந்து எல்லையில் ரஷ்யா குண்டு வீசி உள்ளது. ஆயுத சப்ளை செய்யும் நாடுகளை எச்சரித்து உள்ளது. குறுகிய காலத்தில் முடிய வேண்டிய போர், மேற்கு நாடுகள் ஆயுத உதவியால் இழுத்தடித்து செல்கிறது. இதை உடைக்க ரஷ்யா புதிய வியூகம் அமைத்துள்ளது. அதன்படி, உக்ரைனின் தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் தெருக்களில் ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து வருகிறது.

குறிப்பாக, கிழக்கில் உள்ள தொழில்துறையை குறிவைத்து நிலக்கரி சுரங்கங்கள், உலோகத் தொழிற்சாலைகள், கனரக உபகரணத் தொழிற்சாலைகள் உட்பட அங்கு  குவிந்துள்ள தொழில்துறை சொத்துக்களை உக்ரைனிடம் இருந்து கைப்பற்ற வகையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மரியுபோலில் தொழிற்சாலை மற்றும் மருத்துவமனை மீது கனரக குண்டுகள் வீசப்பட்டது. கார்கிவ் மற்றும் கிராமடோர்ஸ்க் ஆகிய கிழக்கு நகரங்கள் கொடிய தாக்குதலுக்கு உள்ளாகின. மேற்கே உள்ள சபோரிஜியா மற்றும் டினிப்ரோவைச் சுற்றியுள்ள பகுதிகளை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டது. ஏவுகணை-வார்ஹெட் சேமிப்பு கிடங்குகள் உட்பட ஏராளமான உக்ரைனின் ராணுவ தளங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்கியது.

இதற்கிடையே, போர் தீவிரமடைந்துள்ளதால் உக்ரைனில்  தங்களது படைகளின் எண்ணிக்கை ரஷ்யா அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள்  வீரர்களை கூடுதலாக குவித்து வருகிறது. இதுவரை 65 குழுக்கள் கொண்ட ரஷ்ய  படைகள் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 78 குழுக்களாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் சுமார் 800 வீரர்கள் உள்ளனர்.  அதன்படி, சுமார் 62,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ரஷ்யாவின் தனியார் வாக்னர் குழுவை சேர்ந்த கூலிப்படையினர், சிரியா, லிபியாவைச் சேர்ந்த ரஷ்ய ஆதரவு போராளிகள் 10,000 முதல் 20,000 பேரை ரஷ்யா குவித்துள்ளதாக கூறப்படுகிறது.  

* சும்மா கொடுத்தது வினையாகிடுச்சு…

சோவியத் யூனியாக இருந்த காலத்தில் உக்ரைன் பலமிக்க ஆயுதங்கள் வைத்துள்ள நாடாக இருந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவிடம் ஆயுதங்களை உக்ரைன் வழங்கியது. இந்த ஆயுதங்கள் மூலம் உக்ரைனுக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது என ரஷ்யா உத்தரவாதம் அளித்தது. ஆனால், இன்று நிலைமை மாறி உள்ளது. அந்த கால கட்டத்திலேயே அணு ஆயுதங்களை உக்ரைன் வைத்திருந்தது.

* காட்டுமிராண்டி ரஷ்ய ராணுவம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘ரஷ்ய ராணுவம் தன்னிடம் உள்ள அனைத்தையும் போரில் வீசுகிறது. பெரும்பாலான போருக்கு தயாரான படைகள் இப்போது உக்ரைனிலும் ரஷ்யாவின் எல்லையிலும் குவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் உக்ரைனுக்கு எதிராக எங்களுடன் போராடும் திறன் கொண்ட அனைத்தையும் நெருங்கி விட்டனர். அவர்கள் ராணுவ தளங்களை மட்டுமே தாக்குவதாக கூறினாலும், பொதுமக்களை கொல்வது தொடர்கிறது. இந்த போர் மூலம் ரஷ்ய ராணுவம் உலகின் மிக காட்டுமிராண்டித்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற ராணுவமாக உலக வரலாற்றில் என்றென்றும் தன்னை எழுதிக் கொள்கிறது,’ என்று கூறினார். 

உதவிகளும்… தடையும்…

* அமெரிக்க அதிபர் பைடன், வரும் நாட்களில் கூடுதல் பீரங்கி மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய புதிய ஆயுத உதவிகளை அறிவிப்பார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல், கனடா மற்றும் நெதர்லாந்து நாடுகள், கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர்கள் தெரிவித்து உள்ளனர்.

* உக்ரைன் மீதான போரை கண்டித்து, ரஷ்யாவின் ‘மிகவும் விருப்பமான நாடு’ வர்த்தக அந்தஸ்தை ஜப்பான் அரசு முறைப்படி ரத்து செய்தது.

* உக்ரைனுக்கு சுமார் 100 வான் பாதுகாப்பு அமைப்புகளை நார்வே அரசு வழங்கி உள்ளது.

* மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்கள் அனைத்தும் காலாவதியானவை. இதற்கு ரஷ்யா எளிதில் அழித்துவிடும் என்று ஐ.நாவுக்கான ரஷ்ய துணை நிரந்திர பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ் தெரிவித்துள்ளார்.

* போர் நிறுத்தம்: ரஷ்யா மறுப்பு

கிறிஸ்தவர்களின் புனித வாரத்தை முன்னிட்டு, இன்று முதல் 4 நாட்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், ‘இது கொஞ்சம் சந்தேகம்’ என்று ரஷ்ய துணை தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Share Button