August 7, 2021 9:52 am

ஆடி அமாவாசை யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும், கொடுக்க கூடாது?

ஆடி அமாவாசை 23ம் தேதி (ஆகஸ்ட் 8) ஞாயிறு அன்று வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவசியம்.

இருப்பினும் பலருக்கு அமாவாசை தினத்தில் யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும், யார் கொடுக்கக் கூடாது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. முதலில் தர்ப்பணம் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

யாருக்கெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் ?

ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர் முன்னேறுவதற்கு ஏதேனும் ஒரு வகையில் சில உதவி செய்திருப்பார்கள். அவரால் தான் நான் இன்று நன்றாக இருக்கிறேன், நன்றாக வாழ்வதற்கு சிறப்பாக சம்பாதிக்கிறேன், குடும்பத்தை கவனிக்க முடிகிறது, நான்கு பேருக்கு நல்லது செய்ய முடிகிறது என நினைப்பவர்களும், இவர் ஆபத்து, அவசர நேரத்தில் பணம் அல்லது பொருள் கொடுத்து உதவினார் என்றோ, இவர் எனக்கு வேலை வாங்கி தந்தார் என அவர்கள் செய்த உதவியை நினைத்து பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அப்படி உதவி செய்தவர்களுக்கு, அவர்கள் உயிர் நீத்து இருந்தால் நாம் அவர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அப்படி இருக்க நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் தாய், தந்தையருக்கும், அவர்களின் தாய், தந்தையருக்கும், அவர்களின் தாய், தந்தை என மூன்று தலைமுறை, மூன்று வம்சங்களின் தாய், தந்தையரை நாம் வணங்கி தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இப்படி நம் வாழ்வை உயர்த்துவதற்கும், நம் வாழ்வின் ஏணிகள், விதைகளாக இருந்த ஒவ்வொருவரையும் ஒருபோதும் மறக்காமல், அவர்களுக்கு நன்றி சொல்வது அவசியம். அப்படி நன்றி சொல்லும் விஷயம் தான் தர்ப்பணம் எனும் வழிபாடு.

தர்ப்பணம் என்றால் நீர் நிலைகளில் தேவர்களுக்கு ஜலத்தை அள்ளி விட்டு, தெய்வத்தின் பெயரோடு தர்ப்பயாமி என செய்வதாகும். தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது என்று பொருள். அது ஒரு புண்ணிய காரியம்.

அதே போல முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் விட வேண்டும்.

ஆத்மாவில் புண்ணியம் செய்த ஆத்மா, பாவம் செய்த ஆத்மா என இரண்டும் உண்டு. ஒருவர் வாழ்வில் செய்யக்கூடிய பாவ, புண்ணியங்களைக் கணக்கில் கொண்டு தான், பித்ரு லோகத்தில் அவர்களுக்கான இடம் அமையும் என்கிறது சாஸ்திரம்.

அமாவாசை முதலான நாட்களில் நாம் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் கொடுப்பதால், அது நம் முன்னோர்களை சென்று சேரும். அது அவர்கள் செய்த பாவங்களின் கெடுபலன்கள் குறையும். புண்ணியம் அதிகரிக்கும்.

இப்படி நம் முன்னோர்களை வணங்கி நற்பலனைப் பெறுவதோடு, முன்னோருக்கும் புண்ணியம் சேர்ந்து அவர்களின் பாவத்தை குறைத்து புண்ணியத்தைப் பெற்றிடலாம்

யாரெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்? செய்யக்கூடாது?

ஒருவரின் பெற்றோரான தாய், தந்தை இருவரும் இல்லையெனில் அவர்கள் கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டும். தாய் உண்டு, தந்தை இல்லை என்றாலும், தந்தை உண்டு, தாய் இல்லை என்றாலும், இருவரும் இல்லை என்றாலும் நிச்சயமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் அவர்களின் தாய் தந்தையர் பற்றி தெரிந்தால் அவர்களுக்கும், தெரியாவிட்டாலும், முன்னோர்கள் என நினைத்து அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

எனக்கு அண்ணன் இருக்கிறார். அவர் தான் கொள்ளி வைத்தார், தம்பி தான் கொள்ளி வைத்தான் என எப்படி இருந்தாலும், தாய், தந்தை இல்லாத ஒவ்வொருவரும் தர்ப்பணம் கொடுப்பது அவசியம். எப்படி தாய், தந்தையின் சொத்தில் பிள்ளைகள் ஒவ்வொவருக்கும் பங்கு உண்டோ, அதே போல அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் அவசியம்..

பெற்றோர் கடன் வாங்கி இருந்தால் அவர்களின் பிள்ளைகள் திருப்பி செலுத்துவது, அப்படி தான் அவர்களின் பாவத்தைப் போக்கி புண்ணித்தை அளிப்பதும் அவசியம்

அதிலும் குறிப்பாக மற்ற அமாவாசை தினங்களில் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருப்பர். ஆனால் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூ உலகிற்கு வருவதாக ஐதீகம்.

அன்று நாம் வணங்கி தர்ப்பணம் கொடுப்பது கூடுதல் விஷேசம்.

Share Button