April 15, 2022 3:06 am

அவநம்பிக்கை மற்றும் குற்றப் பிரேரணைகள் கையளிப்பு பிற்போடப்பட்டது.!

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகிறது. தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்கட்சி முன்னதாக திட்டமிட்டிருந்தது.

அதற்கான பிரேரணைகளில்; ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் கையொப்பமிடும் நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பமிட்டுள்ளார். அதேநேரம், அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

 அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை மற்றும் குற்றப் பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை மறுதினம் சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.

 இதன்போது, குறித்த பிரேரணைகளை சபாநாயகருக்கு கையளிக்கும் காலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என எதிர்கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றன.

Share Button