March 5, 2022 2:12 am

அரை இறுதியில் ஜாவா லேன் – கலம்போ வெட்டரன்ஸ்.!

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக சிட்டி புட்போல் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட காலபந்தாட்ட கழகங்களுக்கு இடையிலான எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது அரை இறுதிப் போட்டி சிட்டி புட்போல் லீக் மைதானத்தில் இன்று சனிக்கிழமை 05 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஜாவா லேன் இளையோர் அணியும் கலம்போ வெட்டரன்ஸ் இளையோர் அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

ஜாவா லேன் இளையோர் அணி, லீக் போட்டிகளில் ஸ்லேவ் ஐலண்ட் (2 – 0), கலம்போ எவ்.சி. இளையோர் அணி (0 – 2), வைக்கிங்ஸ் இளையோர் அணி (2 – 0), பேர்கசன் இளையோர் அணி (2 – 0) என்ற பெறுபேறுகளைக் கொண்டிருந்தது.

சோண்டர்ஸ் இளையோர் அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் போட்ட கோலின் மூலம் 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் ஜாவா லேன் இளையோர் அணி வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இதேவேளை கலம்போ வெட்டரன்ஸ் இளையோர் அணி லீக் போட்டிகளில் றினோன் இளையோர் அணி (3 – 1), ருட்ரா இளையோர் அணி (3 – 1), யுனைட்டட் இளையோர் அணி (4 – 0) ஆகிய அணிகளை இலகுவாக வெற்றி கொண்டிருந்தது.

தொடர்ந்து கால் இறுதியில் படோவிட்ட யுனைட்டட் இளையோர் அணியை 4 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் கலம்போ வெட்டரன்ஸ் வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட இளையோர் அணி தகுதி பெற்றது.

இந்த இரண்டு அணிகளின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து பார்த்தால் கலம்போ வெட்டரன்ஸ் இளையோர் அணி சற்று பலம்வாய்ந்ததாகத் தென்படுகின்றது.

எனினும் ஜாவா லேன் இளையோர் அணி தமது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் எதிரணிக்கு பலத்த சவால் காத்திருப்பதாக கருதப்படுகின்றது

Share Button