July 12, 2021 3:28 am

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராகக் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த வேலையில்லாப்பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் விமானப்படை முகாமிலிருந்து வெளியிட்டிருக்கும் காணொளியிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாம் சட்டவிரோதமான முறையில் முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றோம். நாட்டின் கல்விக்கட்டமைப்பை சீர்குலைக்கக்கூடிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழ சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் நாம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தையடுத்தே இங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றோம்.

இவையனைத்திற்கும் எதிராக கொழும்பில் நாளைய தினம் (இன்றைய தினம்) அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஊடாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அனைத்துத் தயார்ப்படுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன.

எமது நாட்டில் இலவசக்கல்வியின் ஊடாகக் கல்வியைப் பெற்றுப் பயனடைந்த, அதேபோன்று இலவசக்கல்வியைப் பாதுகாக்கவேண்டும் என்று கருதும் அனைவரும் நாளைய தினம் (இன்று) அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தில் தலையிடவேண்டாம் என்ற கோரிக்கையை அனைவரும் இணைந்து முன்வைப்போம்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் போர்வையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளையும் உடனடியாக நிறுத்துமாறு வலியறுத்துகின்றோம்.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைகழகச் சட்டமூலத்திற்கு எதிராக முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே இப்போது நாம் இந்தத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கின்றோம்.

இருப்பினும் இலவசக்கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை, கல்விக்கட்டமைப்பை இராணுவமயமாக்கும் வகையிலான மேற்படி சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு நாமனைவரும் ஒன்றுபடுவது அவசியமாகும்.

எனவே இச்சட்டமூலத்திற்கு எதிராகவும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் நாளைய தினம் (இன்றைய தினம்) கொழும்பில் ஒன்றிணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share Button