May 3, 2022 1:36 am

மரியுபோலின் இரும்பு ஆலை பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், அழுகிய நிலையில் ஏராளமான சடலங்கள் இருப்பதாக உக்ரைன் ராணுவத்தின் 12வது படைப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணி தொடங்கி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. தற்போது, உக்ரைனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

துறைமுக நகரமான மரியுபோலை சமீபத்தில் ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில், அங்குள்ள மிகப்பெரிய இரும்பு ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் படையினர் வசம் உள்ளது. அங்கு 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பதுங்கி உள்ளனர். மரியுபோல் நகரம் போரில் முற்றிலும் உருக்குலைந்த நிலையில், இரும்பு ஆலையில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று தொடங்கியது. ரஷ்ய படையின் குண்டுவீச்சில் தரைமட்டமாகி கிடக்கும் இரும்பு ஆலையில் பதுங்கி குழிகளில் இருந்து மக்கள் சிலர் நேற்று மீட்கப்பட்டனர். 46 பேரை ரஷ்ய ராணுவம் வெளியேற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் ராணுவத்தின் 12வதுபடைப்பிரிவு தலைவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஆக்கிரமிப்பில் உள்ள இரும்பு ஆலைக்குள் நூற்றுக்கணக்கான குழந்தைகள், மக்கள் சிக்கி தவிக்கின்றனர். 500க்கும் மேற்பட்ட உக்ரைன் படைவீரர்கள், அழுகிய நிலையில் ஏராளமான சடலங்கள் கிடக்கின்றன. பதுங்கு குழியில் உள்ளவர்களை வெளியேற்ற மேலும் சில நாட்கள் கூடுதலாக தேவைப்படும்,’’ என தெரிவித்தார்.

ஐநா. மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் சாவியானோ அப்ரூ, “இரண்டு மாதங்களுக்கு மேலாக மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கி தவித்த மக்கள் சிறிது சிறிதாக மீட்கப்பட்ட பிறகு, அவர்களுக்கு உளவியல் சோதனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும்,’’ என தெரிவித்தார்.

Share Button