September 22, 2021 4:09 am

கனேடிய பொதுத்தேர்தலில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார் ‘கெரி ஆனந்தசங்கரி’

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரான ‘கெரி ஆனந்தசங்கரி’ என்றழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனேடிய பொதுத்தேர்தலில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

தனது 13 வயதில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த கெரி ஆனந்தசங்கரி, கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் போட்டியிட்டு 34.8 வீத வாக்குகளை பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.

அதன்பின்னர், 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்காபரோ தொகுதியில் போட்டியிட்ட அவர் 62.2 சதவீத வாக்குகளைப்பெற்று மீண்டும் நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

இம்முறை தேர்தலில் 15,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாகவும் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

கனடாவில் சட்டத்தரணியான கெரி ஆனந்தசங்கரி, அந்நாட்டின்  மனித உரிமைகள் செயற்பாட்டாளராகவும், செயற்பட்டுவந்துள்ளார்.

இந்நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தேர்தலில் போட்டியிட்ட அவர் மூன்றாவது தடவையாகவும் நாடாளுமன்றம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share Button