May 3, 2022 1:14 am

கத்திரி வெயில் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் 111 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு, கத்திரி வெயில் காலத்தில் 113 டிகிரியை வெயில் தாண்ட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது தமிழகத்தில் தற்போது கோடை காலம் உச்சத்தை தொட்டுள்ளது. வரும் 4ம் தேதி முதல் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது. இது 25 நாட்கள் நீடிக்கும். அப்போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில் தான் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம். தற்போதே வெயில் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது கத்திரி வெயிலின் வீரியத்தையும் சகித்தாக வேண்டும். கத்திரி வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக காணப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயிலின் அளவு உச்சத்தைத் தொட்டு வருகிறது.

தமிழகத்தில் பரவலாக இயல்பை விட கூடுதலாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை தமிழகத்தில் இயல்பைவிட  வெயில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் 4ம் தேதி முதல் கத்திரி வெயில் காலமும் தொடங்குவதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த கத்திரி வெயில் காலங்களில்  113 டிகிரி வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

அதே நிலை 2016, 2017ம் ஆண்டுகளில் நிலவியது. வேலூரில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2021வரை குறைந்த பட்சம்  108 டிகிரி முதல் அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயில் நிலவியது. மதுரையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை குறைந்த பட்சமாக 104 டிகிரி முதல் அதிகபட்சம் 110 டிகிரி வரை வெயில் நிலவியது. இந்த நிலவரங்களை பார்க்கும் போதும், தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் இந்த ஆண்டு மே மாதம் 113 டிகிரியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Share Button