April 28, 2022 1:39 am

இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான், மீது மர்ம நபர் தக்காளி வீசிய சம்பவம் நடந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. இதில், எல்.ஆர்.இ.எம்., எனப்படும் லா ரிபப்ளிக் என் மார்செல் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான இமானுவேல் மேக்ரான், பிரதான எதிர்க்கட்சியான ஆர்.என்., எனப்படும் நேஷனல் ரேலி கட்சியின் மரின் லீ பென், 53, உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இமானுவேல் மேக்ரான் 58 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வானார்.

தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டி நேற்று அதிபர் மெக்ரோன், பாரிசின் வடமேற்கில், செர்ஜி பகுதியில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் மீது குறிவைத்து எங்கிருந்தோ தக்காளி வீசப்பட்டது.உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் தயாராக வைத்திருந்த குடையை விரித்து மெக்ரோனை அங்கிருந்த பத்திரமாக அழைத்துச்சென்றனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த அக்டோபரில் லியோன் நகர் சென்றிருந்த போது மெக்ரோன் மீது முட்டை வீசப்பட்டது. அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு, மென்ரோன் கன்னத்தில் ஒருவர் அறைந்தார்.இப்போது தக்காளி வீச்சு தாக்குதலுக்குள்ளாகினார்.

Share Button