March 31, 2021 11:12 am

அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.!

பிரிட்டிஷ், சுவீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் புனே நகரை சேர்ந்த சீரம் நிறுவனம், அஸ்ட்ரா ஜெனிகாவின் கொரோனா தடுப்பூசியை ‘கோவிஷீல்ட் என்ற பெயரில் தயாரித்து, விநியோகம் செய்து வருகிறது.

இந்த தடுப்பூசியால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக சில மாதங்களுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டின. இதன் பேரில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் முதியவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டது.

எனினும் ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மட்டும் தடை விலக்கி கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்று நோய்கள் அமைப்பு கடந்த வாரம் கூறும்போது, “கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தொடர்பாக அஸ்ட்ரா ஜெனிகா அமெரிக்காவிடம் அளித்த புள்ளிவிவரங்கள் போதுமானதாக இல்லை.

முழுமையான விவரங்களை அளிக்க வேண்டும்“ என்று கோரியது. இந்த பின்னணியில், “55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்“ என்று கனடா நாட்டின் தேசிய நோய் எதிர்ப்பு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று கனடாவின் பெரும்பாலான மாகாணங்களில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Share Button