July 20, 2021 9:52 am

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது என்று சொல்வார்கள். அப்படி எனில் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.!

தண்ணீர் குடிக்கும் முறை குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. உணவின் போது தண்ணீர் குடிக்க கூடாது என்று பரிந்துரைப்பார்கள். உணவுக்கு முன்பும், உணவிற்கு பின்பும் கூட தண்ணீர் குடிக்க கூடாது என்று பரிந்துரைப்பதுண்டு.

சிலர் சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். ஆயுர்வேதம் தண்ணீர் குடிக்கும் முறை குறித்து சொல்வது என்ன எப்போது நம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்

நாம் எப்போது தண்ணீர் குடிக்கிறோம் என்பதை கவனித்து பார்த்தால் வெளிப்படையாக தாகமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்கலாம். இது இயல்பானது. இந்த தாகம் உணவுக்கு முன்பும், பின்பும் உணவு உண்ணும் போதும் கடைப்பிடிப்பது உண்டு

அதே போன்று பசியுடன் இருக்கும் போது தான் உணவை எடுத்துகொள்கிறோம். இது இயற்கை. இயற்கை உபாதைகள் சிறுநீர், மலம் கழிப்பதும் அப்படியே தான். இவை எல்லாம் இயல்பானவை

உணவுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா என்றால் மருத்துவர்கள் உணவுக்கு இடையில் தண்ணீர் தவிர்க்க வேண்டும் என்று தான் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ஆயுர்வேதம் உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்கலாம் என்று சொல்கிறது.

உணவுக்கு முன்பு தண்ணீர் குடித்தால் அது உடலில் அக்னியை பலவீனப்படுத்தும். அக்னி என்பது செரிமான மண்டலம் ஆகும். நீர் குளிரூட்டி என்பதால் இது இரைப்பை சாறை நீர்த்துபோக செய்கிறது. இதனால் உடலில் செரிமான வலிமைக்கு நேர் எதிராக இது செயல்படுகிறது.

அதனால் உணவுக்கு முன்பு நீங்கள் தண்ணீர் குடிக்க கூடாது என்பதை ஆயுர்வேதம் உறுதியாக சொல்கிறது. உணவுக்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் பலவீனம் மற்றும் மயக்கம் ஏற்படலாம் என்றும் சொல்கிறது.

உணவுக்கு பிறகு உடனடியாக தண்ணீர் குடிக்கும் போது அது உணவின் தரத்தையும் உடலின் செரிமான வலிமையையும் நேரடியாக பாதிக்கிறது.. இதனால் எந்த உணவை சாப்பிட்டலும் உடனடியாக தண்ணீர் குடிக்கும் போது அது குளிரூட்டும் தன்மையை உடலுக்கு வழங்குகிறது.

வழக்கமாக இதை செய்து வந்தால் உடல் பருமனாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. அதனால் ஆயுர்வேதம் உணவுக்கு பிறகு உடனடியாக தண்ணீர் குடிப்பதை ஆதரிக்கவில்லை.

ஆயுர்வேதத்தின் படி சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். அப்படி செய்வது உணவை ஈர்ப்பதமாக்குகிறது. உணவை நன்றாக துகள்களாக உடைக்க உதவுகிறது. எண்ணெய் அல்லது காரமான ஒன்றை சாப்பிட்டால் இதன் மூலம் தாகமும் தணிகிறது.

உணவுக்கு இடையில் தண்ணீர் சிறிது சேர்ப்பது ஆரோக்கியமான பழக்கமாகும். அதே நேரம் தாகம் தணிக்க சிறிய அளவு தண்ணீரை குடித்தால் போதுமானது. இல்லையெனில் தண்ணீர் வயிற்றை நிரப்பும். உணவின் அளவு பெருமளவு குறையும்.

உணவின் போது தண்ணீர் குடிக்க விரும்பினால் தண்ணீர் அறைவெப்பநிலையில் இருக்க வேண்டும். அதிக குளிர்ந்த நீர் குடிப்பதால் செரிமான நெருப்பை குறைக்க முடியும். இது நொதிகளை செயலற்றதாக்குகிறது.

மேலும் உடலில் நச்சுக்கழிவுகள் சேர்வதற்கு வழிவகுக்கிறது. இது அமில ரிஃப்ளக்ஸ் அல்லது ஒரு இடைவெளியில் குடலிறக்கம் போன்ற நச்சு நோய்களுக்கும் காரணமாகிறது. அதே போன்று சாப்பிடும் போது குளிர்பானங்கள் மற்றும் காஃபி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாப்பிட்டு முடித்த உடன் தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல. உணவை முடித்தவுடன் அரை மணி நேரம் கழித்து பிறகு தண்ணீர் குடிக்கலாம். இது தாகத்தை மேலும் அதிகரிக்கும். அதே நேரம் வயிற்றில் முழுமையான உணர்வை அளிக்கும்.

உணவுக்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து குடித்தால் செரிமான செயல்முறை முடிந்துவிடும் என்பதால் இயன்றவரை தண்ணீர் குடிக்கலாம்.

நீரிழிவு, தைராய்டு இன்னும் சில வியாதிகளுக்கு உணவுக்கு முன்பு மருந்து எடுத்துகொள்ள வேண்டும். இவர்கள் உணவுக்கு முன்பு மருந்து தண்ணீரில் எப்படி எடுப்பது என்று கேட்கலாம்.

உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பு மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்திருப்பதை நினைவுப்படுத்திகொள்ளுங்கள். அதே நேரம் குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதிப்படுத்திகொள்ளுங்கள்.

Share Button