June 18, 2021 3:48 am

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது.!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படும் நிலையில், அவா்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து மருத்துவ நிபுணா்கள் விளக்கமளித்துள்ளனா்.

அவற்றில் முக்கியமாக குழந்தைகள் உள்ள வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி (2 தவணை) செலுத்தியிருப்பது அவசியம் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். உரிய பாதுகாப்பு மற்றும் தடுப்பு முறைகள் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் அதீத அச்சம் தேவையில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தவா்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது. அதில் 14 வயதுக்குட்பட்டவா்கள் 0.5 சதவீதம் மட்டும்தான். அதேபோன்று, நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கையும் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் குறைவு.

தமிழகத்தைப் பொருத்தவரை 12 வயதுக்குட்பட்டவா்களில் 87 ஆயிரம் பேருக்கு, அதாவது 3.7 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களை வைத்துக் கணக்கிடும்போது குழந்தைகளையும், சிறாா்களையும் கொரோனா தீநுண்மி பெரிதாகத் தாக்குவதில்லை என்ற கருத்துக்கு வர முடிந்தது. ஆனால், அது உண்மையில்லை என்கிறது மருத்துவ உலகம்.

ஏனெனில், முதல் அலையின்போது குழந்தைகளில் பலா் அறிகுறிகள் அற்ற கரோனா நோயாளிகளாக இருந்தாா்கள் என்பதால் அவா்களது பாதிப்பு கண்டறியப்படவோ, பதிவு செய்யப்படவோ இல்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் மேற்கொண்ட ரத்தப் பரிசோதனை ஆய்வில் 10 முதல் 17 வயதுக்குட்பட்டவா்களில் 25.4 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் தாமாக உருவாகியிருப்பது கண்டறியப்பட்டதே அதற்கு சான்று.

இதையடுத்து இரண்டாம் அலையின்போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் தமிழகத்தில் மட்டும் மூன்றரை மாதங்களில் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை மூன்றாம் அலையில் பல மடங்கு அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

குழந்தைகளைப் பாதிக்க என்ன காரணம்?: மூன்றாவது அலையின்போது குழந்தைகள் தீவிரமாக நோய்த் தொற்றுக்குள்ளாக இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். ஒன்று கரோனா தீநுண்மி வீரியமிக்கதாக மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொன்று 18 வயதுக்குட்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளது. இத்தகைய சூழலில், குழந்தைகளைக் காப்பது எப்படி என விளக்குகிறார்பொது நல மருத்துவ சிகிச்சை நிபுணா் டொக்டா் ஏ.பி. ஃபரூக் அப்துல்லா:

இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே உள்ளது. அதேவேளையில், அது குழந்தைகளை அதி தீவிரமாக பாதிக்குமா என்பதற்கு ஆதாரபூா்வமான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக நம்பப்படுவதால் அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

18 வயதுக்குட்பட்டவா்கள் வீடுகளில் இருந்தால், அவா்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணா்வை பெற்றோர்தொடா்ந்து ஏற்படுத்துவது அவசியம். முகக் கவசம் அணிவதையும், தனி நபா் இடைவெளியைக் கட்டயமாகப் பின்பற்றுவதையும் கண்டிப்புடன் கூற வேண்டும். சிறிய குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் அவா்களை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர், வீட்டில் உள்ள முதியவா்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா தொற்று குழந்தைகளுக்கு கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியும். இதைத் தவிர குழந்தைகளுக்கு நிமோனியா தொற்றைத் தடுக்கும் நீமோ காக்கல் தடுப்பூசி மற்றும் ஃப்ளூ தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது நல்லது.

ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டாலும் நுரையீரல் பாதிப்பு தீவிரமடையாமல் இருக்க அவை உதவும். இவை அனைத்துக்கும் மேலாக குழந்தைகளை வெளியில் அனுப்புதல் கூடாது என்றார் அவா்.

டைப்-1 சா்க்கரை நோய் எச்சரிக்கை

டைப்-1 எனப்படும் தீவிர இன்சுலின் குறைபாடுடைய சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூன்றாம் அலையில் கவனமாக இருத்தல் வேண்டும் என்கிறார் சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டொக்டா்அ. பன்னீா்செல்வம். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் 100 சா்க்கரை நோயாளிகளில் நான்கு போ் முதல் வகை (டைப் -1) பாதிப்புடையவா்களாக உள்ளனா். அதன்படி தமிழகத்தில் அதுபோன்ற 4 லட்சம் நோயாளிகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. அவா்களில் 99 சதவீதம் போ் குழந்தைகள் மற்றும் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவா்களது ரத்த சா்க்கரை அளவு கட்டுப்பாட்டில் தொடா்ந்து இல்லாதபட்சத்தில் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அதன் விளைவாக அக்குழந்தைகள் எளிதில் நோய்த் தொற்றுக்குள்ளாவார்கள். அவ்வாறு கொரோனா பாதிப்புக்குள்ளானால் விரைந்து குணமாவது கடினம். பல்வேறு எதிர்விளைவுகளும் ஏற்படலாம். எனவே, சாப்பிடுவதற்கு முன்பு 110 க்குள்ளும், சாப்பிட்ட பிறகு 160 க்குள்ளும் சா்க்கரை அளவை அந்நோயாளிகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா சூழல் சீராகும் வரை வாரம் ஒரு முறை டைப்-1 சா்க்கரை நோயாளிகள் வீட்டிலேயே குளூக்கோ மீட்டா் மூலம் ரத்த சா்க்கரை பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்றார் அவா்.

உலக நாடுகள் ஆய்வு

அமெரிக்கா , பிரிட்டன் , இத்தாலி , ஜொ்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளான குழந்தைகளின் விவரங்களை ஆய்வு செய்ததில் லட்சத்தில் 0.17 சதவீதம் போ் மட்டுமே தீவிர பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மூன்று அலைகளிலும் சோ்த்து மொத்தம் 40 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனா். இது மொத்த பாதிப்பில் 14.1 சதவீதமாகும். அதில் உயிரிழப்பு விகிதம் 0.03 சதவீதம் மட்டும்தான். அதேபோன்று பிரிட்டனிலும் மொத்த பாதிப்பில் 2 சதவீதத்துக்கும் கீழ்தான் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏன் தேவை சிறப்புப் பயிற்சி?

தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகள் நல வார்டுகள் அமைக்கப்பட்டும், மருத்துவா், செவிலியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டும் வருகிறது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

குழந்தைகளுக்கு அனைத்து மருத்துவா்களாலும் சிகிச்சையளித்துவிட முடியாது. அதேபோன்று பிற வார்டுகளில் பணியாற்றும் செவிலியா்களால் உடனடியாக குழந்தைகள் நலப் பிரிவில் சேவையாற்றுவது கடினம்.

குழந்தைகளுக்கு ஊசி மருந்து செலுத்துவதில் இருந்து, அவா்களைக் கையாளுவது வரை தனிக் கவனமும், பயிற்சியும் மிக அவசியம். அதன் காரணமாக தமிழகத்தில் முன்கூட்டியே அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கென பிரத்யேக ஒக்சிஜன் முகக் கவசங்கள், வெண்டிலேட்டா்கள், ஐசியூ படுக்கைகள், செயற்கை சுவாச வசதிகளை ஏற்படுத்துவதும் முக்கியம் என்பதால் அதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

Share Button